Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

Monday, March 7, 2011

2011 மார்ச் மாத வாக்குத்தத்தம்

இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். இந்த மார்ச் மாதத்திலே கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்

"நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்"     ஏசாயா 66:13


அன்பானவர்களே, இக்கால சூழ்நிலையில் ஒவ்வொருவரும் தேற்றரவற்று, ஆதரவற்று காணப்படும் சூழ்நிலையே காணப்படுகிறது. என்னதான் குடும்பத்தினர், உறவினர்கள் என  இருந்தாலும் ஒவ்வொருவரும் ஏனொ தனிமைப்படுத்தப்பட்டு ஒரு ஏக்கத்தோடு, ஒரு வெறுமையோடு, ஒரு தேடுதலோடு, ஒரு வெறுப்போடு தங்கள் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிற ஜனங்கள், வாலிபர்கள் ஏராளமாய் காணப்படுகின்றனர்.

இந்த வெறுமைக்கு காரணம் சத்துருவானவன் ஆண்டவருடைய உறவில், ஐக்கியத்தில்  இருந்து நம்மை தூரப்படுத்தி நமக்கு துக்கத்தை வருவிக்கப் பண்ணுவதே சத்துருவானவனின் நோக்கமாக காணப்படுகிறது.


அன்பானவர்களே, உங்கள் தேடுதல்கள், உங்கள் ஏக்கங்கள், இவைகள் எல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகவே இருக்கட்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் நிச்சயமாய், "எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்". நீங்கள் சிறுமைப்பட்டு, நொறுங்குண்டு காணப்படுகிறீர்களோ? கர்த்தர் சொல்கிறார்,

"சிறுமைப்பட்டு, ஆவியில்  நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்கிறவனையே நோக்கிப் பார்ப்பேன்"  ஏசாயா  66:2

அவர் உங்களை நோக்கிப் பார்க்கிறவராய் காணப்படுகிறார். நீங்கள் அவருடைய வசனத்திற்கு நடுங்கிறவராய் காணப்பட வேண்டும். அவரை (கிறிஸ்துவை) நாடுங்கள், அவர் வசனத்திற்கு நடுங்குங்கள், அவர் உங்களை தேற்றுவார். எனக்கு அன்பானவர்களே, நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

நீங்கள்  ஒரு சிறு குழந்தையாய் இருந்த சமயத்தில் உங்கள் தாய் உங்களை தேற்றி இருப்பார்கள். அடுத்து, உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்ட பயணத்தின் போதும், உங்கள் தோல்வியில் உங்களை யாரோ ஒருவர் தேற்றியிருக்கலாம்.

அந்த தேற்றரவே உங்களை இவ்வளவு தூரம் நிற்க வைக்குமானால் எம் பரமனாகிய  இயேசு கிறிஸ்துவின் தேற்றரவு உங்களுக்கு  எவ்வளவு ஆசீர்வாதமாய்  இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நிச்சயமாய் உங்கள் வாழ்க்கைப் பயணத்திலே ஒரு மாறுதலை கொடுக்க கர்த்தர் விரும்புகிறார். அதற்காகவே உங்களை தேற்றுவேன் என்று வாக்குப் பண்ணுகிறார். நீங்கள்
அவரை அண்டிக் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாய் உங்களை ஆற்றித் தேற்றி அரவணைப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவாராக.  ஆமென்.