Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

ARTICLE

இயேசு கிறிஸ்துவின் மகத்துவம்

இயேசு சுவாமி 2000 ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத்தில் வசித்து வந்தார். அவரது சொற்களும் செயல்களும் இந்த உலகத்தை மாற்றி அமைத்தன. "இயேசு" தம்மை நம்புவோர் அனைவருக்கும் உதவி புரிகிறார். மேலும் அவர், நாம் செய்த பாவங்களை மன்னித்து நமக்கு 'பரலோக' வாழ்வை தருவார்.

இயேசு தனது சிறு வயதில் அவரது தந்தை 'யோசேப்பு'க்கு தச்சு தொழிலில் உதவி செய்து வந்தார். அவருக்கு 12 வயதாகும் போது, தேவாலயத்தில் வேத ஞானிகளிடம்  வேதத்தை குறித்து பேசினார். சிறு வயதில் அவரது வேத வார்த்தையை கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசுவுக்கு சுமார் 30 வயதாகும் போது அவர் மற்ற ஊர்களுக்கு சென்று கடவுளை பற்றி மக்களுக்கு எடுத்து கூறினார். மேலும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்றும் சொன்னார். அதில் அவருக்கு உதவி செய்ய 12 சீஷர்களை அவர் தேர்வு செய்தார்.

ஒரு நாள் "நிக்கோதேமஸ்" என்னும் யூத மத தலைவர் நம் இயேசுவிடம் கடவுளை பற்றி சில கேள்விகளை கேட்டார். இயேசு அவரிடம், "நமது பிதாவானவர்  இந்த உலகத்தில் உள்ள மக்களிடம் மிகுந்த அன்பு செலுத்துவதால் அவர் தனது சொந்த மகனை இந்த உலகத்திற்கு அனுப்பி அவரை நம்புவோர் அனைவரும் கெட்டு போகாமல் 'பரலோக' வாழ்வை அடையும்படி செய்வார்" என்று சொன்னார். இத்தகைய மகத்துவம் வாய்ந்த நம் இயேசு சுவாமி செய்த அற்புதமான மகிமைகளை பார்ப்போமா !


"கானா" ஊரிலே ஒரு திருமணம் நடைப்பெற்றது. அதற்கு இயேசுவும் அவரது சீஷர்களும் அழைக்கப்பட்டார்கள். அவரது தாய் மரியாள் அங்கே இருந்தார்கள். அப்போது திராட்சை இரசம் குறைவாக இருந்ததால் இயேசுவின் தாய் அவரை பார்த்து  திராட்சை இரசம் இல்லை என்றார்கள். அதற்கு இயேசு: "உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கிறது, என் வேளை இன்னும் வரவில்லை என்று சொன்னார்."
ஆனால் அவருடைய தாய் அங்கு வேலை செய்யும் வேலைகாரர்களை கூப்பிட்டு இயேசு சொன்னதை செய்ய சொன்னார். இயேசு வேலைகாரர்களை நோக்கி ஜாடிகளை தண்ணீரால் நிரப்புங்கள். நிரப்பப்பட்ட ஜாடிகளில் இருந்து மொண்டு விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டது. அந்த திராட்சை இரசம் முன்பு கொடுக்கப்பட்டதை விட மேலும் அதிக சுவை உள்ளதாக இருந்தது. இது தான்  இயேசு சுவாமி செய்த முதல் அற்புதம் ஆகும்.

ஒரு முறை இயேசு சீஷர்களுடன் படகில்  சென்ற போது புயல் காற்றும், பெரிய அலைகளும் சீறிக்கொண்டு வந்தன. சீஷர்கள் படகு மூழ்கிவிடுமோ என்று பயந்தனர். அப்போது படகில் உறங்கி கொண்டிருந்த இயேசு சுவாமியை சீஷர்கள் எழுப்பினர். இயேசு காற்றையும் கடல் அலைகளையும் பார்த்து "இரையாதே அமைதியாய் இரு" என்றார். அவை அவருக்கு உடனே கீழ்ப்படிந்தன. உடனே  சீஷர்கள் ஆச்சிரியப்பட்டார்கள்.

ஒரு நாள் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் இயேசு சுவாமியின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மிகவும் பசியோடிருந்தார்கள். இயேசு ஒரு சிறுவனிடமிருந்து 5 ரொட்டிகளையும், 2 மீன்களும் எடுத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தி பரிமாறினர்.

என்ன ஆச்சரியம்! ரொட்டிகளும் மீன் துண்டுகளும் பல மடங்காக பெருகி எல்லா மக்களும் வயிராற உணவு உண்டு மகிழ்ந்தனர். அவர்களும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மற்றொரு முறை உடல்நிலை பாதிக்கப்பட்ட 12 வயது  சிறுமியை குணப்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் இயேசு சுவாமியிடம் வேண்டி கேட்டுக் கொண்டார்கள். இயேசு சுவாமியும் அவர்களது வேண்டுகோள்களுக்கு  இணங்கி அவளது வீட்டிற்கு சென்று பார்த்த போது, அந்த சிறுமி மரிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறினார். பின்பு "பயப்படாதிருங்கள், என்னை நம்புங்கள்" என்று கூறி இயேசு சுவாமி அந்த சிறுமியின் கையைப்பிடித்து "சிறுப்பெண்ணே எழுந்திரு" என்றார். அவள் உடனே எழுந்து நடமாட ஆரம்பித்தார். எப்படிப்பட்ட மகத்துவம் வாய்த்தவர்.

மேலும் முடமான ஒருவனை நடக்க வைத்தார். கண் தெரியாத குருடர்களின் பார்வைகளை திறந்தார். இயேசுவின் நண்பர் லாசரை மரித்து, கல்லறையில் அடக்கம் செய்யதார்கள். இயேசு கல்லறையில் அடைக்கப்பட்ட கல்லை அகற்றிவிட்டு "லாசருவே வெளியே வா" என்றார். உடனே லாசரு சவக்கட்டுகளுடன் வெளியே வந்தார்.
இயேசு: " என்னை நம்புகிறவன் மரித்தாலும் பிழைப்பான்" என்றார்.

எல்லாவற்றிக்கும் மேலாக, முதலாவது இறைவன் மேல் அன்பு செலுத்த வேண்டும். இரண்டாவது நம்மைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும் என்று மக்களிடம் சொன்னார். அவர் மக்களை நேசித்தார். மக்களும் அவரை நேசித்தார். ஒரு முறை சிறுவர் சிறுமிகள் இயேசுவிடம் வர ஆசைப்பட்டனர். ஆனால் சீஷர்கள் அவர்களை தடுத்தனர். இயேசு அவர்களிடம் "சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வர விடுங்கள், பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது" என்றார்.

இயேசு சுவாமி தன்னை சிலுவையில் அறையப்பட்ட அந்த மரண வேதனையில் கூட "பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது என்ன என்று அறியாது இருக்கிறார்கள்" என்று இறைவனிடம் மன்றாடினார். பார்த்தீர்களா!!! அவரது மகத்துவத்தையும், அவர் செய்த அற்புதங்களையும்.... நாமும் இயேசு சுவாமியின் உபதேசத்தை நம் வாழ்வில் கடைப்பிடித்தால் பரலோக ராஜ்ஜியம் நம்முடையது, என்பதில் கடுகளவும் ஐயமில்லை..